அண்ணன் மாரடைப்பால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் தங்கை சாவு - மதுரையில் சோகம்
40 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணன்-தங்கை பாசம் தொடர்ந்துள்ளது.;
மதுரை,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது குளத்துப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 56). இவர் உசிலம்பட்டி தாலுகா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். இவருக்கு 2 அக்காள் மற்றும் ஒரு தங்கை உள்ளதாக கூறப்படுகிறது. இவரது 3 சகோதரிகளில் இருவர் வெளி மாநிலங்களிலும், ஒரு தங்கை தேனியிலும் திருமணம் முடித்து கொடுக்கப்பட்டுள்ளனர்.
சிறு வயது முதலே அவரது பாசத்தை பங்கு போட்டு வந்த பிச்சையின் சித்தப்பா மகளான தங்கம்மாள்(50) இவரது கிராமத்தின் அருகிலேயே நக்கலப்பட்டியில் வசித்து வந்தார். அண்ணனுக்கு தேவையானதை தங்கையும், தங்கைக்கு தேவையானதை அண்ணனும் செய்து கொடுத்து அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது பாசத்தை பெருமடங்காக பகிர்ந்துள்ளனர். இப்படி 40 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணன்-தங்கை பாசம் தொடர்ந்துள்ளது.
இந்தநிலையில் பிச்சைக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இந்த தகவல் அறிந்து அவரது உடலை பார்க்க தங்கம்மாள் வந்துள்ளார். அங்கு அண்ணனின் உடலை கட்டி அணைத்து அழுதபோது, தங்கம்மாளுக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அண்ணன் மடியிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தங்கம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.
40 ஆண்டு காலம் ஒன்றாக இணைந்து இருந்த அண்ணனும், தங்கையும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.