செங்கல் உற்பத்தி செய்வதற்கு குளங்களில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்
செங்கல் உற்பத்தி செய்வதற்கு குளங்களில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று செங்கல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல் உற்பத்தி செய்வதற்கு குளங்களில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று செங்கல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாழ்வாதாரம்
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் சிறிய அளவிலான செங்கல் சூளைகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது. ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இந்த சூளைகள் உள்ளது.
இந்தநிலையில் செங்கல் சூளைகளில் இருந்து வெளிவரும் புகை மற்றும் மண் துகள்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக பல இடங்களில் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் ஒதுக்குப்புறமான இடங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் செங்கல் உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான மண் எடுப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதால் செங்கல் உற்பத்தித்தொழில் மிகவும் சிரமமானதாக மாறி வருகிறது. இந்தநிலையில் குளங்களில் மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது போல செங்கல் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தான தொழில்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கட்டுமானத் தொழிலின் முக்கிய அங்கமாக செங்கல் உற்பத்தித் தொழில் இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது சிமெண்டு செங்கல்கள் உள்ளிட்டவற்றின் வரவு செங்கல் உற்பத்தித் தொழிலில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நவீன எந்திரங்களைப் பயன்படுத்தி பெரிய அளவில் உற்பத்தி மேற்கொள்ளும் பெருநிறுவனங்களின் (சேம்பர்) வருகையும் சிறு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஆபத்தான தொழில்களில் ஒன்றாகக் கருதப்படும் செங்கல் உற்பத்தி கடுமையான பணிச் சூழலைக் கொண்டது.
இதனால் இந்த தொழிலில் ஈடுபட புதிய தொழிலாளர்கள் முன்வருவதில்லை. எனவே குடும்பத்துடன் உழைக்க வேண்டிய நிலையிலேயே பெரும்பாலான செங்கல் சூளைகள் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் உற்பத்தி பாதிப்பால் வேலை இழப்பு ஏற்படுவதுடன் பொருளாதார சேதமும் ஏற்படுகிறது.
இவை அனைத்தையும் தாண்டி செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிலையில் மண் எடுப்பதில் ஏற்படும் சிரமங்களால் தொழிலைக் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே விவசாயிகளுக்கு குளங்களில் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுவது போல செங்கல் உற்பத்தியாளர்களுக்கும் அரசின் விதிகளுக்கு உட்பட்டு மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்'.
இவ்வாறு அவர்கள் கூறினர்.