மின் இணைப்புக்கு தடையில்லா சான்று வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது

மின்இணைப்புக்கு தடையில்லா சான்று வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-14 19:00 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

மின்இணைப்புக்கு தடையில்லா சான்று வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தடையில்லா சான்றிதழ்

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் விஜய் நகரம் காட்டு வளவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் இளவரசன் (வயது 30). இவர் அப்பகுதியில் கடையுடன் கூடிய புதிய வீடு கட்டினார். இதையடுத்து அவர் தனது வீடு மற்றும் கடைக்கு மின் இணைப்பு பெறுவதற்காக பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தடையில்லா சான்று வழங்ககோரி விண்ணப்பித்தார்.

ஆனால் பேரூராட்சி நிர்வாகம் காலதாமதம் செய்ததாக தெரிகிறது. இதனால் இளவரசன் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட அலுவலர்களுக்கு உதவியாளராக பணிபுரியும் பில்பருத்தியை சேர்ந்த வெங்கடாசலம் (57) என்பவரை அணுகினார். அப்போது இளவரசனிடம் தடையில்லா சான்று வழங்க தனக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என வெங்கடாசலம் கேட்டார்.

பேரூராட்சி ஊழியர் கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத இளவரசன் இதுகுறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் போலீசார் ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்தனர்.

இதையடுத்து இளவரசன் பொம்மிடியில் உள்ள தர்மபுரி மெயின் ரோடு மாரியம்மன் கோவில் அருகே வெங்கடாசலத்துக்கு பணம் கொடுத்தார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வெங்கடாசலத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை பேரூராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்ற போலீசார் ரூ.25 ஆயிரம் லஞ்சம் யார் வாங்க சொன்னது? எனக் கேட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மின் இணைப்புக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்