வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-05-22 18:03 GMT

நகை-பணம் திருட்டு

பெரம்பலூரை அடுத்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எழில் நகர் பகுதியில் வசித்துவருபவர் பாலகிருஷ்ணன் (வயது 45). கட்டிட சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி சத்யா இரும்பு கம்பி, சிமெண்டு விற்பனை செய்யும் தனியார் கடையில் வேலை பார்த்து வருகிறார். பாலகிருஷ்ணன்- சத்யா தம்பதிகளுக்கு வினோதினி என்ற மகளும், வினோத் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் பாலமுருகன் தனது மைத்துனருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு, கடந்த 21-ந் தேதி அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்திற்கு சென்றுள்ளனர். நேற்று மதியம் 1 மணி அளவில் சத்யா வீட்டில் வைத்திருந்த திருமணத்திற்கான பொருட்களை எடுத்து செல்ல வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த மர பீரோ மற்றும், இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம், வளையல் உள்ளிட்ட சுமார் 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சத்யா உடனே பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்