திருவோணம் அருகே கோவில் சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்
கோவில் சிலைகள் உடைப்பு
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள பாதிரங்கோட்டை தெற்கு கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் இருந்த முனீஸ்வரர், செல்லிவெட்டி உள்ளிட்ட சிமெண்டால் செய்யப்பட்டிருந்த சாமி சிலைகளை நேற்று சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கோவிலில் திரண்டனர். இவர்கள் சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
4 பேர் மீது வழக்கு; போலீஸ் குவிப்பு
இதுகுறித்து பாதிரங்கோட்டையை சேர்ந்த அருணாச்சலம் (வயது55) கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் பாதிரங்கோட்டையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், செல்வராஜ், அழகு, நந்தகுமார் ஆகிய 4 பேர் மீது சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.