பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்-அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

Update: 2022-09-16 18:45 GMT

காரியாபட்டி,

காரியாபட்டியில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

காலை உணவு வழங்கும் திட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மந்திரிஓடை தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்திய அமைச்சர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினர். பின்னர் அமைச்சர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில், ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

3,884 மாணவர்கள்

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 69 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 3,884 மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதனை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 அரசு தொடக்கப்பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்கள் அனைத்தும் பழுது பார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ராஜம், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாணகுமார், காரியாபட்டி யூனியன் தலைவர் முத்துமாரி, பேரூராட்சி தலைவர் செந்தில், கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், நரிக்குடி கண்ணன், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, முடுக்கன்குளம் தி.மு.க. பிரமுகர் வாலை முத்துச்சாமி, மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், தோப்பூர் தங்கப்பாண்டியன், கவுன்சிலர்கள் செல்வராஜ், சங்கரேஸ்வரன், ஒன்றிய பிரதிநிதி கல்யாணி, ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பர பாரதி, சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்