கோவில் பூட்டை உடைத்து அம்மனின் தாலி-உண்டியல் பணம் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து அம்மனின் தாலி-உண்டியல் பணம் திருட்டுபோனது.

Update: 2023-03-07 19:09 GMT

தா.பழூர்:

கோவிலின் பூட்டு உடைப்பு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் சிலால் - உடையார்பாளையம் செல்லும் சாலையோரத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் பூசாரியாக உள்ளார். பூஜை முடிந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோவிலை ராமலிங்கம் பூட்டிவிட்டு சென்றார்.இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் பூஜைகள் செய்வதற்காக ராமலிங்கம், காலையில் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது கோவில் கருவறை வரை உள்ள 3 கதவுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தன. இது பற்றி உடனடியாக கோவில் நிர்வாகத்தினருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

பணம் திருட்டு

இதையடுத்து அங்கு வந்த கோவில் நிர்வாகிகளுடன் பூசாரி ராமலிங்கம் கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த மூன்று உண்டியல்கள் மற்றும் அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தாலி திருட்டுேபானது தெரியவந்தது. இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார், கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது கோவிலையொட்டிய பகுதியில் உள்ள பள்ளி வளாகத்திற்கு அருகில் கோவிலில் இருந்து திருடப்பட்ட உண்டியல்கள் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தன. அவற்றில் இருந்த பணத்தை திருடிவிட்டு, உண்டியல்களை மர்ம நபர்கள் அங்கே வீசி சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சத்யராஜ், கோவிலில் இருந்த தடயங்களை சேகரித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக மக்கள் நடமாட்டம் உள்ள சாலையோர கோவிலில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்