ஆம்னி பஸ்சில் பெண் என்ஜினீயர் அருகில் படுத்த வாலிபருக்கு அடி-உதை

சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பஸ்சில் தனக்கு அருகில் படுத்து தூங்கிய வாலிபரை பெண் என்ஜினீயர் சரமாரியாக அடித்து உதைத்தார். அந்த வாலிபர் மற்றும் ஆம்னி பஸ் டிரைவர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-05 17:14 GMT

பெண் என்ஜினீயர்

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 22). என்ஜினீயரான இவர், பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் தனது வீட்டுக்கு வந்த சாந்தி, நேற்று முன்தினம் மீண்டும் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

இதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்த சாந்தி, பெங்களூருவுக்கு செல்லும் ஆம்னி பஸ்சில் ஏறினார். 2 பேர் படுத்துச்செல்லும் இருக்கையில் அவர் மட்டும் தனியாக பயணம் செய்தார். பஸ்சில் ஏறியதும் அவர் அயர்ந்து தூங்கி விட்டார்.

வாலிபருக்கு அடி-உதை

சாந்தி திடீரென எழுந்து பார்த்தபோது தனக்கு அருகில் உள்ள இருக்கையில் வாலிபர் ஒருவர் படுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார்.

மேலும் தனக்கு அருகில் படுத்து இருந்த வாலிபரையும் கீழே இறங்கும்படி கூறி சரமாரியாக அடித்து உதைத்தார்.

இதனால் பயந்துபோன வாலிபர், பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். சாந்தி, இதுபற்றி பஸ் டிரைவரிடம் கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

2 ேபர் கைது

இதுகுறித்து கோயம்பேடு போலீசில் சாந்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தனர். அதில் பெண் என்ஜினீயர் அருகில் உள்ள இருக்கையில் படுத்து இருந்தவர் கடலூரை சேர்ந்த சிலம்பரசன் (33) என்பதும், பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல அந்த ஆம்னி பஸ்சில் ஏறியதும் தெரிந்தது.

அவரை பிடித்து விசாரித்தபோது, பஸ் டிரைவர்தான் தன்னை இளம்பெண் படுத்து இருந்த இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கை காலியாக இருப்பதாக கூறியதால் தான் அதில் ஏறி படுத்து கொண்டதாக கூறினார்.

இதையடுத்து கோயம்பேடு போலீசார் சிலம்பரசன் மற்றும் ஆம்னி பஸ் டிரைவர் சுப்பிரமணி (48) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்