ஏரியில் மூழ்கி சிறுவன் சாவு-பிறந்தநாளில் சோகம்
தூசி கிராமத்தில் நண்பர்களுடன் விளையாட சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூசி
தூசி கிராமத்தில் நண்பர்களுடன் விளையாட சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிறந்தநாள் கேக்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி கீதா. இவர்களது மகன் இளமாறன் (வயது 8) அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்தான். மகள் ரித்திகாவும் (6) பள்ளியில் படித்து வருகிறாள்.
நேற்று முன்தினம் இளமாறனுக்கு பிறந்தநாள் என்பதால் மாலை பள்ளியிலிருந்து வந்ததும் உடைகளை மாற்றிக் கொண்டு தனது பெற்றோரிடம் பிறந்தநாள் கேக் வாங்கி வரும்படி கூறினான்.
பின்னர் சக மாணவர்களோடு விளையாடுவதற்காக சென்று விட்டான். மகனுக்கு பிறந்தநாள் கேக் வாங்கிக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது அவன் அங்கு இல்லை.
நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
பிணமாக மீட்பு
போலீசார் அந்த பகுதியில் விசாரித்தபோது கிராமத்தில் உள்ள சித்தேரி ஏரியில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சித்தேரி ஏரியில் ேதடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சித்தேரியில் தேடும் பணியில் ஈடுபட்டனர் அங்கு தண்ணீரில் மூழ்கிய இளமாறனை அவர்கள் பிணமாக மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கேக் வாங்கி வரச்சொல்லிவிட்டு விளையாட சென்ற இளமாறன் ஏரியில் மூழ்கி இறந்ததை பார்த்து பெற்றோர் கதறி அழுதது கண்கலங்க வைத்தது.
இந்த சம்பவம் தூசி கிராமத்தில் ேசாகத்தை ஏற்படுத்தி உள்ளது,