கள்ளக்குறிச்சியில் போஸ்டரை கிழித்ததால் எலக்ட்ரிக்கல் கடை மீது பீர் பாட்டில் வீச்சு பா.ஜ.க.வினர் திரண்டதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சியில் போஸ்டரை கிழித்ததால் எலக்ட்ரிக்கல் கடை மீது பீர் பாட்டில் வீசப்பட்டது. மேலும் அங்கு பா.ஜ.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக குடியிருப்பு எதிரே தினேஷ்பாபு என்பவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடை சுவற்றில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பா.ஜ.க.வினர் போஸ்டர் ஒட்டினர். இதைபார்த்த தினேஷ்பாபு போஸ்டரை கிழித்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பா.ஜ.க.வினர் தினேஷ்பாபுவிடம் எதற்காக போஸ்டரை கிழித்தீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தினேஷ்பாபுவுக்கு ஆதரவாக அதேபகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அங்கு இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து இருதரப்பினாிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த சமயத்தில் பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் திடீரென தான் கொண்டு வந்த பீர்பாட்டிலை தினேஷ்பாபு கடை மீது வீசினார். இதில் அந்த பாட்டில் கடையின் பெயர் பலகை மீது விழுந்தது. பீர்பாட்டில் கண்ணாடி துகழ்கள் அங்கு நின்ற சிலர் மீது பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. நிலைமை மோசமானதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் நேரில் வந்து இருதரப்பினரையும் கலைந்து போக செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.