இருதரப்பினர் சொந்தம் கொண்டாடி வரும்கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

இருதரப்பினர் சொந்தம் கொண்டாடி வரும் அம்மன் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-22 00:38 GMT


இருதரப்பினர் சொந்தம் கொண்டாடி வரும் அம்மன் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆக்கிரமிப்பு கட்டிடம்

தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த சின்னசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிவகிரி பேரூராட்சியில் பெரியார் கடை பஜார் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பெரியபிராட்டி அம்மன் கோவிலை முன்னோர்கள் கட்டியுள்ளனர். அங்கு சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் வழிபட்டு வருகின்றனர். கோவிலின் அருகில் உள்ள காலி இடத்தில் திருவிழா நடக்கும். அந்த காலி இடத்தில் தனிநபர்கள் சிலர், வணிக ரீதியிலான கட்டிடத்தை கட்டுகின்றனர். அங்கு ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

அவமதிப்பு வழக்கு

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனாலும் கோர்ட்டு உத்தரவின்பேரில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே மனுதாரர் சின்னசாமி இறந்துவிட்டார். இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கும்படி அவரது மகள் வாணி ஜெயராமன் சார்பாக வக்கீல் பாஸ்கர்மதுரம் வழக்கு தாக்கல் செய்தார். அதன்பேரில் கோர்ட்டு தாமாக முன்வந்து தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்து என உத்தரவிட்டது.

இதையடுத்து அதிகாரிகள் நேரில் ஆஜராகி, ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக ஒருதரப்பினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியதால் இது சம்பந்தமான நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என விளக்கம் அளித்தனர்.

அறநிலையத்துறை  கட்டுப்பாட்டில் கோவில்

இந்தநிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

பிரச்சினைக்கு உரிய இடத்துக்கு இரு சமூகத்தினர் உரிமை கோரி வருகின்றனர். அந்த கோவில் தனியார் கோவிலா? அல்லது பொது கோவிலா? என அறிவிக்க கோரி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இரு தரப்பினரும் மனு அளிக்க வேண்டும். இந்த கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிர்வாகியை நியமிக்கலாம்.

இரு தரப்பினரின் மனுக்கள் மீது இறுதி முடிவு எடுக்கும் வரை கோவில் மீது யாரும் உரிமை கோர முடியாது. இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளித்து, 12 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்