அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தலைமை பதவி வழங்க வலியுறுத்தி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வாலிபர் வெடிகுண்டு மிரட்டல்

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தலைமை பதவி வழங்க வலியுறுத்தி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-22 20:54 GMT

சூரமங்கலம், 

வெடிகுண்டு மிரட்டல்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியின் தலைமை பதவி வழங்க வேண்டும் என்ற கோஷமும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னை காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார். அப்போது அவர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கட்சி பொதுக்குழு கூட்டத்தில், தலைமை பொறுப்பு வழங்கவில்லை என்றால் சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைப்பேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

தாம்பரம் வாலிபர்

இதைத்தொடர்ந்து சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவுக்கும், சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சேலம் மாநகர போலீசார் மற்றும் சேலம் ெரயில்வே போலீஸ் உட்கோட்ட துணை சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை கொண்டு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் அந்த நபர் சென்னை தாம்பரத்தில் இருந்து மிரட்டல் விடுத்ததும், அவர் பெயர் வினோத் என்றும், அவருக்கு 30 முதல் 35 வயது இருக்கும் என்பதும் தெரியவந்தது. ெதாடர்ந்து போலீசார் அந்த வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தீவிர சோதனை

இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், சேலம் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார், ெரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுமித் ஆகியோர் தலைமையில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் அமரும் இடம், சரக்கு பெட்டிகள் உள்ள இடம், பார்சல் அலுவலகம், இருசக்கர வாகனம் மற்றும் கார் நிறுத்தும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்க்ள.

இந்த சம்பவம் தொடர்பாக சேலம் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. உட்கட்சி பூசல் விவகாரத்தில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் உள்ள சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்