கூடுவாஞ்சேரி அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் காயம்

கூடுவாஞ்சேரி அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-09-22 09:39 GMT

பாய்லர் வெடித்தது

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்களுக்கு உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தொழிற்சாலையில் கியர் கட்டிங் எந்திரத்தில் உள்ள கூலிங் கம்ப்ரஸர் பழுதாகி விட்டது. இதனை சரி செய்வதற்காக பெருங்களத்தூர் ஆர்.எம்.கே நகர் பகுதியை சேர்ந்த மெக்கானிக் சீனிவாசன் (வயது 40), விநாயகமூர்த்தி (45) இருவரும் நேற்று தொழிற்சாலைக்கு வந்து கூலிங் கம்ப்ரஸர் பழுதை சரி செய்வதற்காக வெல்டிங் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுடன் தனியார் தொழிற்சாலையின் ஊழியர் பொன்ராஜ் (வயது 45) உடன் இருந்தார். அப்போது திடீரென கூலிங் கம்ப்ரஸர் பாய்லர் வெடித்தது.

படுகாயம்

இதில் சீனிவாசன், விநாயகமூர்த்தி, பொன்ராஜ் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அங்கு இருந்த ஊழியர்கள் 3 பேரையும் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து தொழிற்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்