கல்வராயன்மலையில் மீண்டும் படகு சவாரி தொடக்கம்

2½ மாதங்களுக்கு பிறகு கல்வராயன்மலையில் மீண்டும் படகு சவாரி தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

Update: 2023-07-27 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன்மலை அமைந்துள்ளது. இங்கு பெரியார், கவியம், மேகம் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இதனை பார்த்து ரசிப்பதற்காக தினந்தோறும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடையும் வகையில் கரியாலூரில் படகு குழாம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் கல்வராயன்மலை ஏழைகளின் சுற்றுலா தலமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தால், படகுகுழாமில் இருந்த 9 படகுகளும் பழுதடைந்தது. இதனால் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் கல்வராயன்மலைக்கு சுற்றுலா சென்ற பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மீண்டும் தொடக்கம்

இதையடுத்து சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று பழுதடைந்த 9 படகுகளில் முதல் கட்டமாக 2 படகுகள் சீரமைக்கப்பட்டன. மேலும் ரூ.2 லட்சம் மதிப்பில் புதிதாக 2 படகுகள் வாங்கப்பட்டன. அதனை தொடர்ந்து சுமார் 2½ மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் படகு குழாமில் மீண்டும் படகு சவாரி தொடங்கியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்