ஏற்காட்டில் படகு போட்டி; சுற்றுலா பயணிகள் உற்சாகம் கோடை விழா இன்று நிறைவு பெறுகிறது
ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி படகு போட்டி நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பங்கேற்றனர். கோடை விழா இன்று(புதன்கிழமை) நிறைவு பெறுகிறது.
ஏற்காடு,
ஏற்காடு கோடை விழா
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏராளமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோடை விழாவின் 7-வது நாளான நேற்று சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெடல் படகு போட்டியும், படகோட்டிகளுக்கு துடுப்பு படகு போட்டியும் நடத்தப்பட்டது.
போட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியை நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதிகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலா அலுவலர் சக்திவேல் மற்றும் ஏற்காடு படகு இல்ல மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
பரிசு பெற்றவர்கள்
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஏற்காட்டை சேர்ந்த திலீப் மற்றும் விஜயவர்மன் முதலிடமும், சேலத்தை சேர்ந்த காமராஜ் மற்றும் மோகன் 2-வது இடமும், திருச்சியை சோ்ந்த சங்கர், சிவா ஆகியோர் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் பரிசை சேலத்தை சேர்ந்த கரோலின் சில்வியா மற்றும் சவுந்தர்யாவும், 2-வது இடத்தை சேலத்தை சேர்ந்த மகிந்தா மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோர் 2-வது இடத்தையும், தர்மபுரியை சேர்ந்த ஹரிணி, சிவசங்கரி ஆகியோர் 3-வது இடத்தையும் பெற்றனர்.
தம்பதிகளுக்கான படகு போட்டியில் முதல் பரிசை, சேலம் ஜெகதீசன்-கீர்த்தனாவும், 2-வது இடத்தை சேலம் சதீஷ்குமார்-ஜனரஞ்சனி தம்பதியும், 3-வது இடத்தை ஏற்காடு இலக்கியம்-பாரதி தம்பதியும் பெற்றனர்.
இதையடுத்து துடுப்பு படகு போட்டியில் ஏற்காடு அனு சதீஷ் முதல் பரிசையும், 2-வது இடத்தை ராமரும், 3-வது இடத்தை கோவிந்தனும் பிடித்தனர்.
இன்று நிறைவு விழா
நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், மாலையில் இதமான சூழல் நிலவியது. 7 நாள் கோடை விழா நடைபெற்ற நிலையில் இன்று(புதன்கிழமை) நிறைவு விழா நடைபெறுகிறது.
கலையரங்கில் நடைபெறும் இந்த விழாவில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார்.