நெல்லையில் 'மாமன்னன்' திரைப்படம் வெளியான தியேட்டர்கள் முற்றுகை; 25 பேர் கைது

நெல்லையில் 'மாமன்னன்' திரைப்படம் வெளியான தியேட்டர்களை முற்றுகையிட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-29 19:13 GMT

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தயாராகி உள்ள 'மாமன்னன்' திரைப்படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது. இந்த திரைப்படத்தை தடை செய்யுமாறு பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர். அவர்களது எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டப்படி மாமன்னன் திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பவானி வேல்முருகன் தலைமையில் அந்த கட்சியினர், நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டருக்கு திரண்டு வந்தனர்.

இதையொட்டி அங்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் அப்போது அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து 5 பெண்கள் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி, திருமண மண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் தியேட்டர் முன்புள்ள ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோன்று நெல்லை வண்ணார்பேட்டையில் மாமன்னன் திரைப்படம் வெளியான தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்