வெளிநாட்டில் இருந்து பரிசு பொருள் அனுப்புவதாக மோசடி; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

சமூக வலைத்தளத்தில் நண்பர்கள் போல் பழகி, வெளிநாட்டு பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Update: 2022-06-04 16:34 GMT

சமூக வலைத்தளத்தில் நண்பர்கள் போல் பழகி, வெளிநாட்டு பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

சமூக வலைத்தள நண்பர்கள்?

அறிவியல் வளர்ச்சியால் இணையதளம், சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் தகவல்களை பரிமாற முடிகிறது. மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான நண்பர்களும் கிடைக்கின்றனர். இத்தகைய சமூக வலைத்தள நண்பர்களுடன், பலர் நெருங்கி பழகுவதோடு சொந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். அதை பயன்படுத்தி சிலர் மோசடி செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதற்கிடையே சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் போல் பழகி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இதுபோன்ற மோசடி நபர்கள் முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் போல் பிறரிடம் பழகுகின்றனர். பின்னர் அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட ஏதேனும் ஒரு வெளிநாட்டில் இருப்பதாக பொய் தகவலை கூறுகின்றனர்.

பரிசு பொருட்கள் மோசடி

வெளிநாட்டில் வசிப்பவர் தனது நண்பர் என்ற பெருமையில் பலர் நெருங்கி பழகுகின்றனர். ஒருகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த பரிசு பொருளை அனுப்பி வைப்பதாகவும், 3 நாட்களில் வந்து சேர்ந்துவிடும் என்றும் மோசடி நபர் கூறுவார். இதனால் மோசடி நபருடன் பழகியவருக்கு வெளிநாட்டு பரிசு பொருட்கள் மீதான ஆவல் ஏற்படும்.

ஆனால் 3 நாட்களை கடந்த பின்னரும் பரிசு பொருள் வந்து சேராது. இதனால் சம்பந்தப்பட்ட நபர் சமூக வலைத்தளத்தில் மீண்டும் மோசடி நபரை தொடர்பு கொள்வார். இதையடுத்து மோசடி நபர் விசாரித்து சொல்வதாக கூறுவார். பின்னர் விமான நிலையத்தில் பரிசு பொருள் இருப்பதாகவும், வெளிநாட்டு பரிசு பொருள் என்பதால் சுங்கவரி செலுத்த வேண்டும். அதற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி ஒரு வங்கி கணக்கு எண்ணை கூறுவார். அவர் கூறியபடி பணத்தை செலுத்தியதும் மோசடி நபர் தனது தொடர்பை முழுமையாக துண்டித்து விடுவார்.

போலீசார் எச்சரிக்கை

அதன்பின்னரே மோசடி நபரிடம் பணத்தை இழந்தது பற்றி சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியவரும். பின்னர் போலீசில் புகார் செய்வார். இதுபோன்ற மோசடி சம்பவங்கள் குறித்து புகார்கள் அதிகம் வருவதாக திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் கூறுகின்றனர். எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். மேலும் மோசடிகள் குறித்து 1930 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்