கொடியேற்ற நிகழ்ச்சிக்கு சென்ற பா.ஜ.க. நிர்வாகி உள்பட 30 பேர் கைது

கொடியேற்ற நிகழ்ச்சிக்கு சென்ற பா.ஜ.க. நிர்வாகி உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-27 20:56 GMT

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே நரசிங்கபாளையத்தில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் நரசிங்கபாளையத்தில் அக்கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற இருந்தது. இதில் பங்கேற்கச்சென்ற பா.ஜ.க.வினருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார், கொடியேற்ற உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்ளிட்ட பா.ஜ.க.வை சேர்ந்த சுமார் 30 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் மீன்சுருட்டி பகுதியில் உள்ள சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் அங்கு சென்று அவர்களையும் கைது செய்தனர். இதில் 3 பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்