விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விலைவாசி உயர்ைவ கண்டித்து பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில் செல்லூர் 50 அடி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ் குமார், மண்டல் தலைவர் மருதாயி, பார்வையாளர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளர் ரஞ்சனா, பிரசார பிரிவு மாநில செயலாளர் ரிஷி, நடிகர் சரவணன் சக்தி ஆகியோர் பங்கேற்றனர்.
விலையை குறைக்க வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசு காய்கறி விலை உயர்வை குறைக்க வேண்டும். பால் விலை உயர்வை குறைக்க வேண்டும். தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உழைக்கும் மகளிருக்கு ஸ்கூட்டர் மானியம் வழங்க வேண்டும். அனைத்து தகுதியான பெண்களுக்கும் உரிமை தொகை ரூ.1000 வழங்க வேண்டும்.தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பா.ஜனதாவினர் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை கைவிட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் சீவலப்பேரி மகான் நன்றி கூறினார். இதுபோன்று மதுரை மாநகருக்கு உட்பட்ட 76 வார்டுகளில் அந்தந்த மண்டல் தலைவர்கள் தலைமையிலும், கிழக்கு மேற்கு புறநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகமலைபுதுக்கோட்டை
நாகமலைபுதுக்கோட்டை அருகே கீழக்குயில்குடி, கரடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கீழக்குயில்குடியில் மண்டல பொதுச்செயலாளர் குபேந்திரன் தலைமையிலும், மேலக்குயில்குடியில் கிளைத்தலைவர் செந்தில்குமார் தலைமையிலும், கரடிபட்டியில் மண்டல பொருளாளர் மார்க்கண்டன் தலைமையிலும், வடபழஞ்சியில் இளையராஜா தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் பஸ் நிலையம் முன்பு பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் சுகந்திரம் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் ராஜாராமன், வக்கீல் முத்துமணி, சித்தரஞ்சன், கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜனதா சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பஸ் நிலையம் மற்றும் ரெயில்வே மேம்பாலத்தை திறக்க கோரியும், பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க கோரியும், விலைவாசியை குறைக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் முருகன், ரமேஷ், செல்வி, மலைச்சாமி, சரவணன், ராணி, தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் திருவேடகம், முள்ளிப்பள்ளம், காடுபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.