பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு

பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2023-07-18 19:03 GMT

தாமரைக்குளம்:

கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டப்படும் என்று அங்கு ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளதை கண்டித்தும், இதனை எதிர்க்கவில்லை என தமிழக தி.மு.க. அரசை கண்டித்தும் அரியலூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்து அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன் கூறுகையில், கடந்த 2017-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மேகதாது ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் பின்னர் 2018-ம் ஆண்டில் காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. அணை கட்டுவதற்கு ஒரு முட்டுக்கட்டையாக அமைய வேண்டும் என்பதற்காகவும், அனைத்து மாநிலங்களுக்கும் நதிநீர் சமமாக பங்கீட்டுடன் வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்றுத்தந்த பெருமை பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க.வுக்குமே சேரும்.

தற்போது கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ள நிலையில், மேகதாது அணை கட்ட முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். ஆனால் அதனை தட்டிக்கேட்க வேண்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெங்களூரு சென்று பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி தொடர்பாக பேசுவது மிகப்பெரிய துரோகமாகும். தி.மு.க. துரோக அரசியலை தமிழக மக்களுக்கு செய்து கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது குறித்து வீதியில் இறங்கி ஒவ்வொரு நபரிடமும் நாங்கள் கொண்டு செல்வோம். தலைமை அறிவித்தால் போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம், என்றார்.

அப்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அய்யாரப்பன், நடராஜன், மாவட்ட துணை தலைவர் கோகுல்பாபு, நகர தலைவர் மணிகண்டன், மாவட்ட பொதுச்செயலாளர் அருள்பிரசாத், மகளிர் அணித் தலைவி அனிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்