பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் எதையும் நிரூபிக்க முடியாது: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் பேட்டி

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் எதையும் நிரூபிக்க முடியாது என குளித்தலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

Update: 2023-04-16 18:39 GMT

கல்வெட்டுகள் திறப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை நகர ம.தி.மு.க. சார்பில் நேற்று குளித்தலை காந்திசிலை மற்றும் பெரிய பாலம் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி கல்வெட்டுகள் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கட்சியின் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ ஆகியோர் கலந்து கொண்டு, கட்சி கொடி ஏற்றி வைத்தும், கல்வெட்டுகளையும் திறந்து வைத்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருமணத்தில் பங்கேற்பு

இதனைத்தொடர்ந்து குளித்தலையில் நடந்த மாநில மாணவரணி செயலாளர் திருமண விழாவில் வைகோ பங்கேற்று பேசும் போது, ஆயிரக்கணக்கான தடைகளை கடந்து வந்துள்ள இந்த இயக்கத்தை எவராலும் அசைக்க முடியாது.

ஒரு சமயத்தில் நானே முதல்-அமைச்சர் ஆவேன் என்று சொன்னவர்கள் தற்போது இல்லை. அரசியல் வாழ்க்கையில் நான் தோற்க மாட்டேன் உறுதியாக வெற்றி பெறுவேன். வருகிற ஆண்டு கட்சியின் அமைப்பு தேர்தல், பொதுக்குழுவை நடத்தி முடித்து சில அறிவிப்புகள் வெளியீட இருக்கிறேன், என்றார்.

பேராதரவு இருக்கிறது

பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கவர்னர் முதல் நாள் ஒன்று சொல்கிறார் மறுநாள் அதை மறுத்து பேசுகிறார். முதல்-அமைச்சர் என்ன சொல்கிறாரோ அதை ஆமோதித்து பேச வேண்டிய நிலைமை கவர்னருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை அழித்துவிடலாம் என்று பேச ஆரம்பித்தவர் கடைசியில் இந்தியால் தமிழை ஒன்றும் செய்து விட முடியாது என்று பேசுகிற நிலைமைக்கு வந்திருக்கிறார்.

அதுபோல பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தினமும் ஒன்று பேசுகிறார் யாரைப் பற்றி பேசுகிறார் என தெரியவில்லை. அவரால் எதையும் நிரூபிக்க முடியாது. தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்களின் செல்வாக்கு, பேராதரவு இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு பணியாற்றுகிறார். ம.தி.மு.க. பொதுக்குழு முடிந்த பின்பு எனது திட்டம் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிகழ்ச்சிகளில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம். ம.தி.மு.க. நகர செயலாளர் சிவேஷ்வர்ஷன், குளித்தலை நகர்மன்ற துணைத்தலைவர் கணேசன், ம.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் நாகரத்தினம், மாவட்ட துணை செயலாளர் மாணிக்கவாசகம், நகர துணை செயலாளர் ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்