கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. தலைமை இதுவரை என்னிடம் கேட்கவில்லை
கூட்டணி முறிவு குறித்து பா.ஜனதா தலைமை இதுவரை என்னிடம் எதுவும் கேட்கவில்லை. இதுகுறித்து கேட்டால் பதில் சொல்வேன் என்று அண்ணாமலை கூறினார்.
கருத்து கேட்கவில்லை
மத்திய அரசு தூய்மைக்கு முன்னுரிமை அளித்து வருவதால், தமிழக அரசு போட்டி போடாமல், இந்தியாவின் திட்டமாக அதனை நினைத்து அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தி.மு.க. பொய் பேசுவதற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறது.
கூட்டணி முறிவு குறித்து என்னிடம் எந்த அறிக்கையும் கட்சி மேலிடம் கேட்கவில்லை. இது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. ஒரு பையுடன் மட்டுமே டெல்லி போகிறேன். டெல்லி சென்றாலும் இப்படியே தான், போகாவிட்டாலும் இப்படித்தான் இருப்பேன். நான் நேர்மையாக இருக்கின்றேன். நடைபயணம் குறித்தும், நடை பயணத்தில் பங்கேற்க இருப்பவர்கள் குறித்தும் ஆலோசிப்பதற்காகவே டெல்லி செல்கிறேன். அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி அமைந்தால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு எதுவும் ஏற்படாது. நான் தினமும் மக்களை சந்திக்கிறேன். 57 சதவீத வாக்காளர்கள் 35 வயதுக்கு உட்பட்டு இருக்கின்றார்கள். அவர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்கின்றனர். இளைஞர்கள் வேறு உலகத்தில் வாழ்கின்றனர். அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காகத்தான் முயற்சிக்கிறேன்.
வெங்காயம் போன்றது
மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது. அரசியலில் பதவிக்காக வந்தவன் நான் கிடையாது. எனக்கு என தனி உலகம் இருக்கின்றது. அதில் வாழ்கின்றேன். அனுசரித்து செல்லும் போக்கு என்னிடம் கிடையாது. நான் யாருக்காகவும் மாறமுடியாது. தி.மு.க. புகழ்பாடவே கம்யூனிஸ்டு கட்சி இருக்கின்றது. இவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரியாக இருக்கின்றனர். ஒரே ஒரு தேர்தலில் பா.ஜ.கவிற்கு 25 சதவீத வாக்கு கிடைத்தால் அதன் மூலம், தமிழகத்தின் அரசியல் தலைகீழாக மாறிவிடும். இந்தியாவில் பா.ஜ.க. மட்டும் தான் சுத்தமான கட்சியாக இருக்கின்றது. என்னை எல்லாரும் எதிர்க்கிறார்கள். அதுதான் என் வளர்ச்சிக்கு காரணம். இதை நான் மாற்றி கொள்ள விரும்பவில்லை. கூட்டணி குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம்
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஒரு நிருபர் குறுக்கிட்டு, மாநில பாரதீய ஜனதா தலைவர் பதவியில் இருந்து உங்களை மாற்றினால், பாரதீய ஜனதாவில் நீடிப்பீர்களா என்று கேட்டார். அதற்கு ஆவேசம் அடைந்த அண்ணாமலை, லட்சுமண் ரேகை எல்லைக்கோடு போல் நிருபர்கள் நிற்க வேண்டும். விரும்பிய எல்லாவற்றையும் கேள்வியாக கேட்க கூடாது என்று கூறினார்.
தூய்மை பணி
முன்னதாக நேற்று காலை கோவை அருகே உள்ள எஸ்.எஸ்.குளம் ஊராட்சியில் உள்ள குளக்கரையில் தூய்மை பணி நடைபெற்றது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள், ஏதாவது ஒரு கதர் பொருளை வாங்க வேண்டும். நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக வைக்கிறேன். கொங்கு மண்டலமான கோவையில் மேற்கொண்ட நடைபயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க வேண்டும் என்பதே எனது முக்கிய பணி. அரசியல் பணியில்லாவிட்டால் விவசாயம் செய்வேன். தற்போது தூய்மை அரசியலுக்கான விதையை விதைத்துள்ளோம் என்றார்.