துண்டு பிரசுரம் வினியோகித்த சகோதரிகளுடன் பா.ஜ.க.வினர் கடும் வாக்குவாதம்-மறியல்

துண்டு பிரசுரம் வினியோகித்த சகோதரிகளுடன் பா.ஜ.க.வினர் கடும் வாக்குவாதம் செய்து, மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-27 18:44 GMT

கிழித்து எறிந்தனர்

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர்களான வக்கீல் நந்தினி, அவரது தங்கை நிரஞ்சனா ஆகியோர் நேற்று இரவு துண்டு பிரசுரங்களுடன் பெரம்பலூர் வந்தனர். அவர்கள், புதிய பஸ் நிலையத்தில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தனர். அப்போது பிரதமர் மோடியை விமர்சித்து துண்டு பிரசுரங்களை கடைகளிலும், பொதுமக்களிடமும் வினியோகம் செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பாரதீய ஜனதா கட்சியினர் மாவட்ட பொதுச்செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் அங்கு திரண்டனர். மேலும் நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் வினியோகம் செய்த துண்டு பிரசுரங்களை பா.ஜ.க.வினர் பறித்து கிழித்து கீழே எறிந்தனர். இதனால் நந்தினி, நிரஞ்சனா மற்றும் பா.ஜ.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

தர்ணா

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு வந்து இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர். அப்போது நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் சிறிதுநேரம் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு ேபாலீசார் அழைத்து சென்றனர். இதற்கிடையே 2 பேரையும் கைது செய்யக்கோரி சாலையில் அமர்ந்து பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் புதிய பஸ் நிலையம் பகுதியில் நேற்று இரவு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்