பெட்ரோல் குண்டு வீச்சு பின்னணியில் பா.ஜனதா, அ.தி.மு.க. இருக்க வாய்ப்பு
கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பின்னணியில் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. இருக்க வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.;
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது கவர்னர் சென்னாரெட்டி மீது அ.தி.மு.க.வினரே முட்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஞாபகப்படுத்துகிறேன். தற்போது கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்டவர் ஒரு ரவுடி. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்படுகிறது. பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொட்டிலை ஆட்டுவதும், பிள்ளையை கிள்ளுவதும் பா.ஜனதா, அ.தி.மு.க.வினர் தான். இவர்கள் தான் பெட்ரோல் குண்டு வீச்சின் பின்னணியில் இருக்க வாய்ப்புள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க இதே போன்ற சம்பவங்கள் அரங்கேறி கொண்டே இருக்கும். எந்த குற்ற செயலிலும் தி.மு.க. ஈடுபடாது. பா.ஜனதா மாநில தலைவா் அண்ணாமலை தன்னை திராவிடன் என்று கூறுகிறார். அதே சமயம், திராவிடம் பேசுபவர்கள் குப்பை தொட்டி என்றும் கூறுகிறார். அண்ணாமலையின் கருத்து கண்டனத்திற்கு உரியது. தி.மு.க. ஆட்சியை இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.