தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன..?

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.;

Update:2025-03-22 16:58 IST
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன..?

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய அரசு மேற்கொள்ளவுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், அதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவாதிப்பதற்காக கடந்த 5-ந்தேதி சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு "கூட்டு நடவடிக்கைக் குழு" அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை பல்வேறு மாநிலங்களிலுள்ள முக்கியக் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்-மந்திரிகளுக்கும், முன்னாள் முதல்-மந்திரிகளுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் கடந்த 7-ந்தேதி கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றிடுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

அதனடிப்படையில், முதல்-அமைச்சரின் அழைப்பினை ஏற்று, இன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று, தொடக்க உரை ஆற்றினார். அதனையடுத்து, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். அடுத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:-

  • ஜனநாயகத்தின் உள்ளடக்கம் மற்றும் தன்மையை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுவரையறை பணியை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும். இதனால் அனைத்து மாநிலங்கள், மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் இதுதொடர்பாக ஆலோசிக்கவும், விவாதிக்கவும், பங்களிக்கவும் முடியும்.
  • அரசியலமைப்பு திருத்தங்கள் 42, 84 மற்றும் 87-வது பிரிவுகளின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களை பாதுகாக்கவும், தேசிய மக்கள்தொகை நிலைப்படுத்தல் இலக்கு இன்னும் அடையப்படாததாக இருப்பதால், 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் முடக்கம் மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
  • மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்திய மாநிலங்கள் மற்றும் அதன் விளைவாக மக்கள்தொகை குறைந்துள்ள மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. இதற்காக மத்திய அரசு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளுக்கு முரணான எந்தவொரு எல்லை நிர்ணய நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளையும் எதிர்கொள்ள பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மையக் குழு அமைக்கப்படும்.
  • இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மையக் குழு, தொகுதி மறுவரையால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான அறிக்கைகளை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கும்.
  • இந்தக் கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், இந்தப் பிரச்சினை தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் சட்டமன்றத் தீர்மானங்களைக் கொண்டு வந்து, மத்திய அரசுக்குத் தெரிவிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கும்.
  • கடந்த காலத்தில் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்த தொகுதி மறுவரையறை விவரங்கள் மற்றும் மத்திய அரசு தற்போது மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுவரையறை குறித்த விவரங்களை அந்தந்த மாநில மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை கூட்டு நடவடிக்கைக் குழு மேற்கொள்ளும்.
Tags:    

மேலும் செய்திகள்