தூத்துக்குடி: தேசிய தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர் கைது

தூத்துக்குடியில் தேசிய தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-03-22 18:04 IST
தூத்துக்குடி: தேசிய தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் சமூக வலைதள பக்கங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, புகைப்படங்களை சித்தரித்தோ பரப்புபவர்கள், சாதி ரீதியான மோதல்களை உருவாக்கும் வகையில் செய்தி பதிவிடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் யானை சாலை தெருவை சேர்ந்த சங்கரன் நயினார் மகன் மணிகண்டன் (வயது 35), அவரது முகநூல் பக்கத்தில் தேசிய தலைவர்கள் குறித்து அவதூறாகவும், சாதி ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். மேலும் அவர் நேற்று முன்தினம் (20.03.2025) புதுக்கோட்டை, கூட்டாம்புளி பேருந்து நிறுத்தம் அருகே ஒருவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்றுள்ளார். இதனையடுத்து உடனடியாக புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது ஏற்கனவே இதுபோன்று சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், ஏரல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 7 வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கைதி மணிகண்டன் தான் செய்த தவறை தானாக உணர்ந்து இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று மன்னிப்பு கோரிய காணோளி பதிவையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுபோன்று சமூக வலைதள பக்கங்களில் சாதி ரீதியான மோதல்களை தூண்டும் வகையிலோ, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்