எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சியில் 'பிக்-பாக்கெட்'-அரசு பஸ் முன்னாள் கண்டக்டர் கைது

அ.தி.மு.க. மதுரை மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணனின் உதவியாளர் பாக்கெட்டில் இருந்து ரூ.10 ஆயிரத்து 500 பணம் ‘பிக் பாக்கெட் அடிக்கப்பட்டது.;

Update:2025-03-22 18:55 IST
எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சியில் பிக்-பாக்கெட்-அரசு பஸ் முன்னாள் கண்டக்டர் கைது

 சென்னை,

அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அ.தி.மு.க. மதுரை மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணனின் உதவியாளர் சுந்தரின் பாக்கெட்டில் இருந்து ரூ.10 ஆயிரத்து 500 பணம் 'பிக் பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது.

அவர் சுதாரித்துக் கொண்டு 'பிக்-பாக்கெட்' அடித்த நபரை மடக்கி பிடித்துள்ளார். பின்னர் அந்த நபரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் ஒப்படைத்தனர்.அப்போது அந்த நபர் தனது பெயர் ரஞ்சித்குமார் என்றும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அவரை எழும்பூர் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்திய போது அவர், ரோந்து போலீசாரிடம் பொய்யான தகவலை சொல்லி இருப்பது கண்டறியப்பட்டது.

அவரது உண்மையான பெயர் ராஜ்குமார் (40) என்பதும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர், அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் தகவலும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்