திருநெல்வேலி: கொலை முயற்சி, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் 3 வாலிபர்கள் குண்டாசில் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை முயற்சி, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் தொடர்புடைய 3 வாலிபர்கள் குண்டாசில் கைது செய்யப்பட்டனர்.;

Update:2025-03-22 17:23 IST
திருநெல்வேலி: கொலை முயற்சி, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் 3 வாலிபர்கள் குண்டாசில் கைது

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் தொடர்புடைய சேரன்மகாதேவி, மேல மூணாந்தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் மாயாண்டி (வயது 28) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கவனத்திற்கு வந்ததால், அந்த நபரின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், மாயாண்டி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் நேற்று (21.03.2025) அடைக்கப்பட்டார். 

இதேபோல், நெல்லை மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் தொடர்புடைய மேல திருவேங்கடநாதபுரம், முப்பிடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி(எ) செங்கோடன் மகன் தினேஷ் (வயது 27) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் சோனமுத்து கவனத்திற்கு வந்ததால், அந்த நபரின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், தினேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று (21.03.2025) அடைக்கப்பட்டார். 

இதேபோல் திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம், திம்மராஜபுரம், பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் நம்பிநாராயணன் (வயது 23) பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து மன ரீதியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டு, பெண்கள் மற்றும் சிறுமிகள் மனதில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பீதியையும், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த நம்பிநாராயணன் என்ற 'பாலியல் குற்றவாளி' திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், பாளையங்கோட்டை சரக காவல் உதவி ஆணையர் (பொறுப்பு) ஆவுடையப்பன், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் நேற்று (21.03.2025) அடைக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்