தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் முகாம்

கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து இருக்கின்றனர்.

Update: 2023-07-19 19:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து இருக்கின்றனர்.

காட்டெருமைகள்

கோத்தகிரி பகுதியில் காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் காட்டெருமைகள் நகரின் முக்கிய சாலைகளில் நடமாடி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளிலும், குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களிலும் தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளன.

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தேயிலை தோட்டங்களில் புற்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன. இவற்றை மேய்வதற்காக காட்டெருமைகள் குட்டிகளுடன் வந்து தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன.

விரட்ட வேண்டும்

இந்தநிலையில் வியூஹில், காம்பாய் கடை, ஹேப்பி வேலி உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகளும், பச்சை தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பீதி அடைந்து உள்ளனர்.

இவ்வாறு உலா வரும் காட்டெருமைகளால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்