இரு தரப்பினர் கோஷ்டி மோதல்; விநாயகர் சிலைகள் வைக்க தடை

மரக்காணம் அருகே இரு தரப்பினர் கோஷ்டி மோதல் காரணமாக விநாயகர் சிலை வைக்க தாசில்தார் தடைவிதித்தார்.

Update: 2023-09-18 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு கிராமத்தில் அம்பேத்கர் பஸ் நிறுத்தம் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது விநாயகர் சிலை வைப்பதற்கு மற்றொரு தரப்பினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் மரக்காணம் போலீசார் மற்றும் விழுப்புரம் மாவட்ட குற்ற ஆவண பதிவு கூட துணை போலீஸ் சூப்பிரண்டு உமாசங்கர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் இரு தரப்பினரும் சிலை வைக்க அமைத்திருந்த கொட்டகையை வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் நேற்று அகற்றினர். மேலும் தொடர்ந்து மோதல் போக்கை தடுக்கும் வகையில் மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் மரக்காணம் தாசில்தார் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தைக்கான கூட்டம் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. பிரச்சினை ஏற்பட்ட இடம் கிழக்கு கடற்கரை சாலைக்கு அருகாமையில் உள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் எனவும், சிலை வைக்கும் இடத்திற்கு மேல் பகுதியில் மின்சார கம்பிகள் செல்வதாலும் யாரும் அங்கு சிலை வைக்க கூடாது என அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

சிலைகள் வைக்க தடை

எனவே, அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்கு இருதரப்பினரும் கூனிமேடு கிராமத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதித்து மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் உத்தரவிட்டார்.

மேலும் அடுத்த 15 நாட்களுக்கு பின்பு மீண்டும் அமைதி கூட்டம் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என தாசில்தார் அறிவித்தார். நேற்று விநாயகர் சதுர்த்தி நாளில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த முயற்சித்த வேளையில் இருதரப்பினர் இடையேயும் ஒற்றுமை ஏற்படாததால் சதுர்த்தி விழா கொண்டாட்டம் களை இழந்து காணப்பட்டது. மாறாக வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்