பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கியது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்குவதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மாயாறும் பவானிசாகர் அணையின் நீர் வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் சத்தியமங்கலம், கோபி, பவானி உள்ளிட்ட நகராட்சி பகுதிகளுக்கும் இது தவிர பல்வேறு பேரூராட்சி மற்றும் நூற்றுக்கணக்கான ஊராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இது தவிர தடப்பள்ளி அரக்கன் கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன பகுதியைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானிசாகர் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நீர் வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நீலகிரி மலைப்பகுதியில் மழை பொழிவு குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் சற்று குறைந்துள்ளது. இருந்த போதும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று இரவு 8 மணியளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.42 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 384 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 900 கன அடி தண்ணீரும், பவானி சாகர் வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை நெருங்கிவிட்டது. 100 அடியை தொட்டுவிட்டால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் அப்படியே திறந்து விடப்படும். இதனால் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை, காவல் துறை சார்பில் பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை உள்ள பவானி ஆற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.