கைதிகள், வார்டர்கள் இடையேபயங்கர மோதல்; 11 பேர் காயம்

கோவை மத்திய சிறையில் கைதிகள், வார்டர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் கைதிகள் மரத்தில் ஏறி கைகளை அறுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் மொத்தம் 11 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-09-21 19:30 GMT

கோவை

கோவை மத்திய சிறையில் கைதிகள், வார்டர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் கைதிகள் மரத்தில் ஏறி கைகளை அறுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் மொத்தம் 11 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை மத்திய சிறை

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என மொத்தம் 2,400 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். வால்மேடு பிளாக் பகுதியில் குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 600 பேர் பல்வேறு அறைகளில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 7 கைதிகள் ஒரு குழுவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கும் சிறை வார்டர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் சிறையில் அடிக்கடி சோதனை நடத்துவது தொடர்பாகவும் அவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, 7 பேர் குழுவில் இருந்த 2 கைதிகளை பிரித்து வேறு பகுதியில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது. இதற்கு 7 பேர் குழுவை சேர்ந்த கைதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கைதிகள்-வார்டர்கள் பயங்கர மோதல்

இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் கைதிகளின் அறைகளை சிறை வார்டர்களான ராகுல், பாபுஜான், மோகன்ராம் மற்றும் விமல்ராஜ் ஆகியோர் திறந்து விட்டனர். அப்போது அந்த 7 பேர் குழுவை சேர்ந்த கைதிகள் திடீரென வார்டர்களை சரமாரியாக தாக்கினர். அதேநேரம் மேலும் சில கைதிகளும் வார்டர்களை தாக்க தொடங்கினர்.

இதனால் வார்டர்கள் திருப்பி தாக்க முயன்றனர். இதையடுத்து கைதிகள்-வார்டர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு, அந்த இடமே போர்க்களமாக மாறியது. இதனிடையே சத்தம் கேட்டு வந்த மற்ற வார்டர்கள் விரைந்து வந்து கைதிகளிடம் சிக்கிய வார்டர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

கைகளை அறுத்துக்கொண்டனர்

இதையடுத்து சிறை வார்டர்கள் மற்றும் போலீசார் தடி-அடி நடத்தி கைதிகளை கலைந்து போக செய்து வார்டர்களை மீட்டனர். கைதிகள் தாக்கியதில் வார்டர்களின் சட்டை கிழிந்ததுடன், லேசான காயம் அடைந்தனர்.

இதற்கிடையில் அந்த 7 பேர் குழுவை சேர்ந்த கைதிகள் திடீரென சிறை வளாகத்தில் இருந்த மரத்தில் ஏறி வார்டர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். திடீரென அவர்கள் தங்களுக்கு முகச்சவரம் செய்வதற்காக கொடுக்கப்பட்ட பிளேடால் கைகளை அறுத்துக்கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

உடனடியாக இதுகுறித்து சிறை வார்டர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சிறை அதிகாரிகள் கூடுதல் போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பி வைக்குமாறு கோவை மாநகர போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட மாநகர போலீசார் கோவை மத்திய சிறைக்கு விரைந்தனர்.

அவர்களுடன் சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு ஊர்மிளா ஆகியோர் மோதல் நடந்த வால்மேடு பிளாக் பகுதிக்கு விரைந்து சென்று மரத்தில் ஏறிய கைதிகளை கீழே இறங்குமாறு எச்சரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து 7 கைதிகளும் அரைமணிநேரம் கழித்து மரத்தில் இருந்து கீழே இறங்கினார்கள்.

11 பேர் காயம்

பின்னர் பிளேடால் கைகளை அறுத்தும், தடியடியில் காயமடைந்த கைதிகள் 7 பேர் சிகிச்சைக்காக சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் கைதிகள் தாக்கியதில் காயமடைந்த வார்டர்கள் ராகுல், மோகன்ராம், பாபுஜான், விமல்ராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் வால்மேடு பிளாக் பகுதிக்கு கோவை வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ், உதவி கமிஷனர் சரவணன், ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.அர்ஜூன்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து மோதல் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்