முதல் பெண் யானை பராமரிப்பாளராக பெள்ளி நியமனம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்

தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் யானை பராமரிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள பெள்ளிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.

Update: 2023-08-02 19:13 GMT

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாக திகழ்கிறது. ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒரு பாகன் மற்றும் யானை பராமரிப்பாளரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. முகாம்களில் உள்ள யானைகளை தனிகவனத்துடன் அவர்கள் பராமரித்து வருகின்றனர்.

பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளரின் பணிகளை பாராட்டும் விதமாக தமிழ்நாடு அரசு முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 91 பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கியுள்ளதோடு, சூழலுக்கு இணைந்த சமூக இணக்கமான வீடுகள் ரூ.9.10 கோடி செலவில் கட்டிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் பிறக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் போலாம்பட்டி காப்புக்காடு பகுதியில் உள்ள சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க ரூ.8 கோடியும், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோழிகமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்துக்கு சென்றபோது தெப்பக்காடு யானைகள் முகாம் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

தற்போது, வி.பெள்ளி தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார். அனாதையான யானை குட்டிகளை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையை கருத்தில்கொண்டு, தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் யானை பராமரிப்பாளராக நியமிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிநியமன ஆணையை வி.பெள்ளிக்கு, சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, வி.பெள்ளியின் கணவரும், யானை பராமரிப்பாளருமான பொம்மன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்