மனையை கிரையம் செய்து வழங்காததால் 3 பேருக்கு மனை உரிமையாளர் ரூ 11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
மனையை கிரையம் செய்து வழங்காததால் மனை விற்பனையாளர் 3 பேருக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
கடலூர்
மனை வாங்கினர்
நெய்வேலி வடக்கு வெள்ளூரை சேர்ந்த ஸ்டாலின் மனைவி அழகுமதி (வயது 33). இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் நெய்வேலி 25-வது வட்டத்தை சேர்ந்த வீட்டுமனை விற்பனையாளர் சிவராஜன் என்பவரிடம் ஒரு மனை வாங்குவதற்காக மாத தவணை ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலுத்தி இருந்தார். ஆனால் அவர் கூறியபடி பணத்தை வாங்கிக்கொண்டு மனையை கிரையம் செய்து வழங்கவில்லை.
இதேபோல் நெய்வேலி டவுன்ஷிப் 9-வது வட்டத்தை சேர்ந்த சேதுமணி (54), சந்திரசேகர் (57) ஆகிய 2 பேரும் தலா 3 மனைகள் வாங்குவதற்காக சிவராஜனிடம் தலா ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் செலுத்தினர். இவர்களுக்கும் அவர் மனையை கிரையம் செய்து வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இழப்பீடு
இதையடுத்து அவர்கள் 3 பேரும் தங்களுடைய பணத்தை திருப்பி கேட்டனர். அதற்கு அவர் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் 3 பேரும் தனித்தனியாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று இந்த 3 பேர் கொண்ட குழுவினர் தீர்ப்பு அளித்தனர்.
அதில், இவ்வழக்கில் மனை உரிமையாளர் சிவராஜன், அழகுமணிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை 13.11.2017 தேதியில் இருந்து 24 சதவீத வட்டியுடன் தொகை செலுத்தும் தேதி வரை அளிக்கவும், மன உளைச்சலுக்கு ரூ.1 லட்சம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்.
இதேபோல் சேதுமணி, சந்திரசேகருக்கு தலா ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்தை 24 சதவீத வட்டியுடனும், மன உளைச் சலுக்கு தலா ரூ.1 லட்சம், வழக்கு செலவு தலா ரூ.5 ஆயிரம் என 3 பேருக்கும் சிவராஜன் மொத்தம் ரூ.11 லட்சத்து 55 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.