உருட்டுக்கட்டையால் அடித்து விவசாயி கொலை

திண்டுக்கல் அருகே உருட்டுக்கட்டையால் விவசாயியை அடித்துக்கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-03 19:45 GMT

வாய்த்தகராறு

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள தெத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 80). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. செல்லமுத்துவின் தோட்டத்துக்கு அருகில் அதே ஊரை சேர்ந்த ராஜகுரு என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுக்குளிப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (50) என்பவர் விவசாய கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி காலை ராஜகுரு தோட்டத்தில் வளர்ந்திருந்த பயிர் செடிகள் பிடுங்கப்பட்டு, கரையில் போடப்பட்டிருந்தது. இதனை பார்த்த சுரேஷ், சந்தேகத்தின்பேரில் செல்லமுத்துவிடம் கேட்டுள்ளார். அப்போது சுரேசுக்கும், செல்லமுத்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அக்கம்பக்கத்தினர் 2 தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

வீடு புகுந்து தாக்குதல்

இதற்கிடையே அன்றைய தினம் நள்ளிரவு சுரேஷ், தனது நண்பர்களான தர்மத்துப்பட்டியை சேர்ந்்த நடராஜ் (50), தெத்துப்பட்டியை சேர்ந்த தர்மராஜ் (24), சிவகிரி (25) ஆகியோருடன் செல்லமுத்துவின் வீட்டிற்கு சென்றார். வீட்டுக்குள் புகுந்த 4 பேரும், அங்கு தூங்கிக்கொண்டிருந்த செல்லமுத்து, அவரது மகன்கள் முருகானந்தம் (55), சண்முகராஜா (52), மருமகள்கள் ரத்தினம் (45), ராஜேஸ்வரி (42) ஆகியோரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிஓடிவிட்டனர். இதில், காயமடைந்த செல்லமுத்து உள்பட 5 பேரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

4 பேர் கைது

இதுகுறித்த புகாரின்பேரில் கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் ஆகியோர் சுரேஷ் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சிகிச்சையில் இருந்த செல்லமுத்து நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சுரேஷ், நடராஜ், தர்மராஜ், சிவகிரி ஆகிய 4 பேரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்