கரட்டாங்காடு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

கரட்டாங்காடு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-07-23 20:59 GMT

சோலார்

கரட்டாங்காடு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

500 குடும்பத்தினர்

மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கரட்டாங்காடு. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீதிகளில் ஓடுகிறது.

இதனால் குடிநீர் வினியோகம் முறையாக நடக்கவில்லை. தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. மேலும் பல இடங்களில் தெருவிளக்குகளும் இல்லை. குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு கிடக்கிறது. எனவே போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் நாங்கள் அவதிப்படுகிறோம் என இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சாலை

2-வது மெயின் வீதியை சேர்ந்த பிரேமா:-

கரட்டாங்காடு 2-வது மெயின் வீதியை புதுப்பிப்பதற்காக சாலைகளை பறித்தனர். ஆனால் சாலையை இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. சாலையில் ஜல்லிக்கற்களாக இருப்பதால் தட்டுத்தடுமாறி நடக்க வேண்டி உள்ளது. பலர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து உள்ளனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையை போடுவதுடன், முறையாக குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் குழாயில் உடைப்பு

தேன்மொழி:-

இங்குள்ள பிரதான மெயின்வீதியில் உள்ள இரும்பினாலான குடிநீர் குழாய் உடைந்தது. இதையடுத்து அந்த இடத்தில் பிளாஸ்டிக் குழாயை போட்டு சரி செய்தனர். ஆனால் மீண்டும் பிளாஸ்டிக் குடிநீர் குழாய் உடைந்து விட்டது. இதுவரை சரி செய்யவில்லை.

இதனால் குடிநீர் வெளியேறி சாலையில் வீணாக ஓடுகிறது. இதனால் சாலையில் நடக்க முடியவில்லை. எனவே மீண்டும் இரும்பினாலான குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் முறையாக வினியோகம் செய்ய வேண்டும்.

குப்பை

6-வது மெயின் வீதியை சேர்ந்த கே.சுதாகர்:-

கரட்டாங்காடு கிராமத்துக்குள் குப்பை வண்டிகள் வருவதில்லை. இதனால் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கிறது. அந்த குப்பையில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளும், காகிதங்களும் காற்றில் பறந்து குடியிருப்புகளை சுற்றி விழுந்து கிடப்பதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது.

எனவே குப்பைகளை அள்ளி கிராம பகுதியை சுத்தமாக வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேங்கும் கழிவுநீர்

முரளி:-

நாங்கள் குடியிருக்கும் பகுதியில் வீட்டு கழிவு நீரை குழாய் மூலம் வெளியேற்ற சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. ஆனால் அந்த பணியை ஊராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டு விட்டது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. பல இடங்களில் தெருவிளக்குகள் சரிவர எாியவில்லை. இதனால் வீதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.

எனவே எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம், தெருவிளக்கு, சாக்கடை வடிகால், சாலை போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்