அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
அன்னோடையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஊட்டி
அன்னோடையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அடிப்படை வசதிகள்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். கோத்தகிரி அடுத்த அன்னோடை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அன்னோடை கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். கிராமத்தில் 2 கி.மீ. தூரத்திற்கு சாலை வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதனால் சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய மறுக்கிறார்கள். மேலும் கூடுதல் பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
சிறுத்தை நடமாட்டம்
இதேபோல் தெருவிளக்கு எரிவது இல்லை. இதனால் இரவு நேரங்களில் சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை கன்றுக்குட்டியை கொன்று விட்டது. இதேபோல் குடிநீர் வசதி இல்லை. சமீபத்தில் குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் வழியாக பாம்பு ஒன்று வெளியே வந்தது. இதை பார்த்து பள்ளி மாணவர்கள் பயந்து விட்டனர்.
ஊரை சுற்றி புதர் மண்டி இருப்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து மனு கொடுத்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அபாயகரமான மரங்கள்
ஊட்டி அடுத்த உபதலை அரசுப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் கொடுத்த மனுவில்,
உபதலையில் அரசுப்பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது. இங்கு ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு பிரசாரம் காரணமாக மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பள்ளி வளாகத்தில் அபாயகரமாக உள்ள யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும். பழுதடைந்த நிலையில் உள்ள பழைய கட்டிடங்களை மாற்ற வேண்டும். காலை மற்றும் மாலையில் குன்னூரில் இருந்து வெலிங்டன், பாய்ஸ் கம்பெனி வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.