ரூ.65 கோடியில் மீன் பிடி இறங்கு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்

வானகிரி கிராமத்தில் ரூ.65 கோடியில் மீன்பிடி இறங்கு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டிருப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update:2023-10-16 00:15 IST

திருவெண்காடு

மீன்பிடி இறங்கு தளம்

பூம்புகார் அருகே வானகிரி மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்படுவது அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால், வருடத்தில் பாதி நாட்கள் தஞ்சை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் தங்கி தொழில் செய்து வருகின்றனர்.

இதனால் அதிக பொருட்செலவு ஏற்படுவதாகவும் இந்த பகுதியில் மீன்பிடி இறங்குதளம் அமைத்து தர வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே கடந்த வருடம் திருவெண்காட்டிற்கு வருகை தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இதுகுறித்து கோரிக்கை மனு அளித்தனர். அதனை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் மீன்பிடி இறங்குதளம் அமைக்க ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

ரூ.65 கோடி நிதி

தற்போது இந்த நிதியில் கடலில் இருபுறமும் 240 மீட்டர் அளவிற்கு கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு அரிப்பு ஏற்படாத வண்ணம் குமிழிகள் அடுக்கி வைக்கப்பட உள்ளது. மீன்பிடி ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் மற்றும் மூன்று இடங்களில் கருங்கல் தடுப்புச்சுவர் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து விட்டன. மேலும் மீன் பிடி இறங்கு தள பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து தேவேந்திரன் கூறுகையில் வானகிரி மீனவ கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கவேண்டி தமிழக முதல்-அமைச்சரிடம் என்னுடைய தலைமையில் கிராம பொறுப்பாளர்களுடன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம்.

இந்த கோரிக்கையை உடனடியாக தமிழக முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டு, ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி தற்போது பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த மீன்பிடி இறங்கு தளத்தால் ஏராளமான மீனவர்கள் பயனடைவார்கள். நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், நிவேதா முருகன் எம்.எல். ஏ. மீன்வளத் துறை செயலாளர், அதிகாரிகளுக்கு மீனவர் கிராமத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்