கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் சாலையில் இருந்த தடுப்புச்சுவர் அகற்றம்

கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் சாலையில் இருந்த தடுப்புச்சுவர் அகற்றப்பட்டது.

Update: 2023-08-22 21:15 GMT

கொடைக்கானல் நகரில் இருந்து அப்சர்வேட்டரி செல்லும் சாலையில் கலையரங்கம் பகுதி முதல் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த சாலை சேதமடைந்து காணப்பட்டதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் பஸ் ஒன்று அந்த சாலையில் வந்தபோது, தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், கவுன்சிலர் கலாவதி தங்கராஜ் ஆகியோர் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ராஜா மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தினர்.

அதன்படி, நேற்று கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் ஆபத்தான நிலையில் இருந்த தடுப்புச்சுவர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இந்த பணிகளை நகராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் சேதமடைந்த சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்