மதுபாட்டில்களை பதுக்கி விற்ற பார் ஊழியர் கைது
கழுகுமலையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற பார் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கழுகுமலை:
கழுகுமலை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் நேற்று காலை 7 மணியளவில் கழுகுமலை செந்தூர் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை பார் அருகே வாலிபர் ஒருவர் பையுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 56 மதுபாட்டில்கள் இருந்தன. போலீசார் நடத்தியவிசாரணையில், அவர் கழுகுமலை காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த முருகன்(வயது 36), பார்ஊழியர் என தெரிய வந்தது. தொடர் விசாரணையில், அவர் பார் உள்ளே காலி பாட்டில்களுக்கு அடியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.