கறவை மாடு வாங்க வங்கிகள் அதிக கடன் வழங்க வேண்டும் ;ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தல்

கறவை மாடு வாங்க வங்கிகள் வழங்க வேண்டும் என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-10-14 18:45 GMT

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு அதிக கறவை மாட்டுக்கடனை வங்கிகள் வழங்க வேண்டும் என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

பால்வளத்துறை மற்றும் குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து வருவாய் கிராமங்களிலும் சங்கம் அமைக்க அனைத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களும் முயற்சிக்க வேண்டும். ஆவின் கால்நடை தீவனம் மற்றும் தாது உப்பு கலவை ஒன்றியம் மூலம் கொள்முதல் செய்து அனைத்து உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கும் வழங்க வேண்டும்.

கறவை மாட்டுக்கடன்

சங்கங்களில் காலியாக உள்ள இடங்கள், உறுப்பினர்களின் நிலங்கள் மற்றும் கால்நடைத்துறைக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து தீவனப்புல் பயிரிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சங்க உறுப்பினர்களுக்கு தேவையான கறவை மாட்டுக்கடன்கள் வங்கிகள் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கறவை மாடு பராமரிப்பு கடன்களை அதிக அளவில் வழங்க வேண்டும். பிரதம சங்கங்களில் இருந்து உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் மற்றும் ஊக்கத்தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து கலெக்டர், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வங்கி கடனுக்கான காசோலைகளை வழங்கினார். கூட்டத்தில் துணைப்பதிவாளர் (பால்வளம், திருநெல்வேலி) சைமன் சார்லஸ், ஆவின் பொது மேலாளர் அருணகிரிநாதன், மகளிர் திட்ட இயக்குனர் பீபி ஜாண், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் மகாலிங்கம், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி செந்தில் குமார், பறக்கை கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலைய தலைவர் ஜெனிஸியஸ் இனிகோ, சங்க செயலாளர்கள், அதிகாரிகள், முதுநிலை ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்