கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முழுமையாக வழங்காமல் வங்கிகள் தடை - ஊழியர் சம்மேளனம் கண்டனம்

பெண்களின் கணக்குகளிலிருந்து அபராதத் தொகை பிடித்தம் செய்யப்படுவதாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2023-09-16 23:48 GMT

சென்னை,

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாட்டின் பொதுச்செயலாளர் டி.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழக்கும் திட்டத்தை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வரவேற்கிறது. ஆனால் வங்கிகள் குறைந்த பட்ச இருப்பு இல்லை, குறுஞ்செய்திக் கட்டணம் ஆகிய காரணங்களுக்காக, கணிசமான எண்ணிக்கையிலான பெண்களின் கணக்குகளிலிருந்து அவர்களுக்கு சேர வேண்டிய ஆயிரம் ரூபாயில் பெரும்பாலான தொகையோ, முழுவதுமோ அபராதத் தொகையாக பிடித்தம் செய்துள்ளன என்று தெரிய வருகிறது.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் இந்த கட்டாய அபராதத் தொகை வசூலை வன்மையாக கண்டிக்கிறது. சாமானிய மக்களிடமிருந்து எந்த அபராதக் கட்டணமும் வசூல் செய்யக் கூடாது என்பதே இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் நிலைபாடு. தற்போது தமிழக அரசின் ஒரு முன்னேற்றகரமான திட்டத்தை செயல்பட விடாமல் தடுக்கும் வகையில், பயனாளிகளுக்கு அவர்களின் உரிமைத்தொகை கிடைக்க விடாமல் வங்கிகள் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை உடனடியாக சரி செய்து அனைத்து பெண்களுக்கும் அவர்களின் உரிமைத்தொகை முழுமையாக கிடைக்க செய்ய வேண்டும்."

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்