பிளாஸ்டிக் பொருட்களில் தேனீர், சிற்றுண்டி வழங்குவதற்கு தடை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களில் தேனீர், சிற்றுண்டி வழங்குவதற்கு தடை விதித்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.
ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தும், மாற்றுப் பொருள்களை பயன்படுத்திட தமிழ்நாடு முதல்-அமைச்சரின் புதிய திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்டம் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை அமல்படுத்த அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் செயலாற்ற வேண்டும்.
திடீர் சோதனை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள், வணிக வளாகங்கள், கடைகள், மருந்து கடைகள், பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து, அதற்கு மாற்றுப் பொருளான துணிப்பைகள், காகிதப்பைகள் மற்றும் மண்பாண்டங்கள் ஆகிய பொருட்களை பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், பயன்படுத்துவது போன்றவற்றுக்கு அரசின் அறிவிப்பின்படி நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் திடீர் சோதனை செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அதற்கு அபராதம் விதிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் குடோன்களுக்கு சீல் வைக்க வேண்டும்.
அபராதம்
குறிப்பாக கல்யாண மண்டபங்களில் அதிக அளவு பிளாஸ்டிக் கப்புகள், பாட்டில்கள் நிகழ்ச்சி முடிந்த பின்பு தெருக்களில் தூக்கி வீசப்படுகிறது. இதை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களும், தாசில்தார்களும் இணைந்து கல்யாண மண்டப உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
மேலும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் நாள்தோறும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். கிராம பகுதிகளில் நகர பகுதிகளை காட்டிலும் அதிக அளவு பிளாஸ்டிக் குப்பைகள் இருக்கின்றது. இதை ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கூட்டம் நடத்தி அவற்றை தடை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தேநீர், சிற்றுண்டி
அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அலுவலர்கள் திறம்பட இந்த திட்டத்தை கையாள வேண்டும். இனிவரும் நாட்களில் இது குறித்த தகவல்கள் கண்காணிக்கப்படும். ஆகவே உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் இதற்கென தனி கவனம் செலுத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பொருட்களில் சிற்றுண்டி வழங்குதல் போன்றவை தடை செய்யப்படுகிறது. அனைத்து அலுவலகங்களும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்தி கூட்டங்களில் தேநீர், தண்ணீர் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.