மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைச்சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்

மனிதக் கழிவுகளை மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்வது வேதனையளிக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-07-25 16:32 GMT

கோப்புப்படம் 

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்புகளை, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி தொழிலாளர்கள் சுத்தம் செய்வது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

நாட்டு மக்கள் அனைவரும் நவீன விஞ்ஞான உலகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும் மனிதக் கழிவுகளையும், பாதாள சாக்கடைகளையும் மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனையளிக்கிறது.

இந்திய அளவில் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் மரணத்தில் தமிழகம் முதலிடம் வகித்து வரும் அவல நிலையிலும், அதனை தடுக்கவோ, மாற்றுவழிகளை கண்டறியவோ எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

மாநில அரசின் மூலம் கொண்டுவரப்பட்ட மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதையும், அதனை அமல்படுத்த அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவும் வெறும் காகித அளவில் மட்டுமே இருப்பதையும் அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற அவலச் சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

எனவே, இனியாவது மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைச்சட்டத்தை தீவிரப்படுத்துவதோடு, அப்பாவி தொழிலாளர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்