நடிகர் விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் -ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-09-13 00:28 GMT

சென்னை,

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.21.29 கோடியை லைகா நிறுவனம் ஏற்று கடனை அடைத்தது. அதற்கு பதில், விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து பட உரிமைகளையும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி விஷால் நடித்த வீரமே வாகை சூடும் படத்தை வேறு நிறுவனத்தின் மூலமாக வெளியிட்டுள்ளதாக லைகா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, நடிகர் விஷால் ரூ.15 கோடியை ஐகோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும். அவரது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

தடை விதிப்பு

இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது. மேலும், இந்த தொகையை செலுத்தும்வரை விஷால் தயாரிக்கும் படங்களை வெளியிடக்கூடாது என்றும் தடை விதித்தது.

இந்நிலையில் லைகா நிறுவனத்தின் வழக்கை கடந்த வாரம் விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆஷா, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி நடிகர் விஷால் ரூ.15 கோடியை இன்னும் ஐகோர்ட்டில் டெபாசிட் செய்யவில்லை என்பதால், அவர் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், நடிகர் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவில் கூறியிருந்தார்.

இதன்படி இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஷால் நேரில் ஆஜரானார்.

தவறான தகவல்

அப்போது நடிகர் விஷால் சார்பில் மூத்த வக்கீல் பி.எச்.அரவிந்த்பாண்டியன், 'மார்க் ஆண்டனி' படத்தை தயாரித்துள்ள மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், லைகா நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல் வி.ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "நடிகர் விஷால் தனது சொத்து விவரங்களை இதுவரை தாக்கல் செய்யவில்லை. ரூ.15 கோடியையும் செலுத்தவில்லை. தன்னிடம் எந்தவொரு நிதியும் இல்லை என்று ஐகோர்ட்டில் கூறிய அதே நாளில் மினி ஸ்டுடியோ நிறுவனத்திடமிருந்து ரூ.1 கோடி பெற்றுள்ளார். ஐகோர்ட்டுக்கு அவர் தவறான தகவலை தெரிவித்து இருக்கக்கூடாது" என்று கண்டனம் தெரிவித்தார்.

தடை நீக்கம்

அப்போது விஷால் தரப்பில், அந்த தொகையில் ரூ.90 லட்சம் ஜி.எஸ்.டி., வரியாக செலுத்தப்பட்டு விட்டது. வங்கி கணக்கை ஆய்வு செய்யவும், இந்த விவகாரத்தை பேசி தீர்க்கவும் மத்தியஸ்தர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

மினி ஸ்டுடியோ சார்பில், விஷால்-லைகா இடையிலான பிரச்சினைக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 'மார்க் ஆண்டனி' படத்தை ரூ.60 கோடி செலவில் தயாரித்து 1,400 தியேட்டர்களில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டோம். எனவே இந்த படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பி.டி.ஆஷா, 'மார்க் ஆண்டனி' படத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.

எச்சரிக்கை

பின்னர், "லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை எப்போது செலுத்துவீர்கள்? என விஷால் தரப்புக்கு கேள்வி எழுப்பி, ஐகோர்ட்டில் தெரிவித்த தகவலுக்கு முரணாக வங்கி கணக்குகளில் விவரங்கள் இருந்தால் விஷாலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.

"கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்களையும், விஷாலின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். அன்று விஷால் ஆஜராகத் தேவையில்லை" என்று நீதிபதி விலக்கு அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்