கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடை நீட்டிப்பு

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-10-06 09:17 GMT

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 7-ந்தேதி வெளியிட்ட அறிக்கையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதாகவும், இது தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு மான நஷ்ட ஈடாக ரூ.1.10 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், கொடநாடு வழக்கு விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை எடப்பாடி பழனிசாமி குறித்து பேச உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்