நாளை மகா காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

அரியலூர் மகா காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நாளை வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Update: 2023-08-09 18:41 GMT

அரியலூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நாளை பால்குட ஊர்வலம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 7-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று இரவு சக்தி கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 9 மணியளவில் பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் அடைவார்கள். பின்னர் அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி ஏந்தியும், பறவை காவடி மற்றும் அலகு குத்தியும் ஊர்வலமாக மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் மார்க்கெட் தெரு, வெள்ளாளர் தெரு, சின்ன கடை தெரு, பட்டு நூல்கார தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு வழியாக கோவிலை அடைவார்கள். அதன்பின்னர் மகா காளியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலில் அபிஷேகம் செய்யப்படும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்