பாலையூர் பஞ்சநதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
நூற்றாண்டு பழமை வாய்ந்த பாலையூர் பஞ்சநதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோவில் பாழடைந்து சீரமைக்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. இந்த கோவிலை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் சீரமைக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலையூர் கிராம மக்கள் வேறு ஒரு இடத்தில் புதிய சிவன் கோவில் கட்ட முடிவு செய்து அதன்படி வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வந்த சிவனடியார்கள் பழமை வாய்ந்த பஞ்சநதீஸ்வரர் கோவிலையும் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கூறினார்கள்.
இதனைத்தொடர்ந்து பஞ்சநதீஸ்வரர் கோவில் சீரமைக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி மகா கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகாவிய பூஜை, முதற்கால பூஜை, மகா தீபாராதனை, இரண்டாம் கால பூஜை, வேதபாராயணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்வான புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு புனிதநீர் ஊற்றி மகா தீபாராதனை செய்தனர். இதில் பாலையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.