ஒரு நாள் மழைக்கே சென்னையை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட தி.மு.க. அரசு : ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

உண்மையை மறைத்து தண்ணீர் தேங்கவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .

Update: 2024-10-18 04:08 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் மாதம் 15-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை நிலவுகின்ற ஒன்று என்பதும், இந்தக் காலகட்டத்தில் பல கட்டங்களாக மழைப் பொழிவு இருக்கும் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்றாகும். தி.மு.க. அரசு பொறுப்பேற்றபின் மேற்கொண்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்கூட, திருப்புகழ் குழுவின் பரிந்துரைப்படி 1,135 கிலோ மீட்டர் தூரத்திற்கு வடிகால் அமைப்புகள் அமைக்கப்பட வேண்டிய நிலையில் 785 கிலோ மீட்டர் தூரத்திற்குதான் வடிகால் அமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்றும், மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறப்பட்டு இருக்கிறது. முதல் அமைச்சர் அவர்கள்கூட திருப்புகழ் குழுவின் பரிந்துரைப்படி இன்னும் 30 விழுக்காடு வடிகால் பணிகள் மீதம் உள்ளன என்று தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில், ஒரு நாள் பெய்த மழைக்கே வேளச்சேரி , சேலையூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர். கொரட்டூர், பட்டாளம், துரைப்பாக்கம், பெருங்குடி அசோக் நகர்,தியாகராய நகர், அஸ்தினாபுரம், கொருக்குப்பேட்டை என பல பகுதிகளில் வீடுகள் தண்ணீரில் மிதந்திருப்பதை பத்திரிகைகளும் ஊடகங்களும் படம் பிடித்து காட்டி இருக்கின்றன.

தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு 2022ம் ஆண்டு மே மாதம் தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. பின்னர் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 29 மாதங்கள், இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 19 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், இன்னமும் 30 விழுக்காடு பணிகள் மீதம் இருக்கிறது என்று சொன்னால், அந்த அளவுக்கு ஆமை வேகத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும், தி.மு.க அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதும் தெள்ளத்தெளிவாகிறது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம், 98 விழுக்காடு வடிகால் அமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதாகவும், மூன்று கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒன்பது இடங்களில் இணைப்புப் பணிகள் மட்டுமே மீதமுள்ளன என்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்த நிலையில், ஒரு வருடம் கழித்து 30 விழுக்காடு பணிகள் மீதமுள்ளது என்று கூறுவது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. இந்த நிலையில் "தண்ணீர் தேங்காததுநான் வெள்ளை அறிக்கை" என்று துணை முதல் அமைச்சர் அவர்கள் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. இந்திய வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்தபடி 16-10-2024 மற்றும் 17-10-2024 அன்று மழைப் பொழிவு இருந்திருந்தால், அரசினுடைய செயல்பாடு வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கும். கடைசி நிமிடத்தில், காற்றழுந்த தாழ்வு திசை மாறி ஆந்திர மாநிலத்திற்கு சென்றதன் காரணமாக சென்னையில் மழைப் பொழிவு ஏற்படவில்லை. இது வருண பகவானின் கருணையே தவிர. தி.மு.க.வின் திறமை ஏதுமில்லை. இருப்பினும், ஒரு நாள் மழைக்கே தண்ணீர் பல இடங்களில் தேங்கியது என்பது உண்மை. இந்த உண்மையை மறைத்து தண்ணீர் தேங்கவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என்ற நிலையில், மீதமுள்ள 30 விழுக்காடு வடிகால் அமைப்புப் பணிகளை மேற்கொண்டு, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் தண்ணீரில் தத்தளிப்பதை தடுத்திட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்