சென்னை தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்

இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-18 06:16 GMT

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும் அந்நிகழ்ச்சிகளில் கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலானவர்களால் பேசப்படும் 122 மொழிகளும், 1,599 பிற மொழிகளும் உள்ளன. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு எனும்போது ஒரு மொழியை மட்டும் கொண்டாடுவதற்கு எந்த நியாயமும் இல்லை. உலகின் மூத்த மொழியான தமிழ் பேசப்படும் மாநிலத்தில் இந்திக்கு மட்டும் விழா எடுக்கப்பட்டால் அது நாட்டின் பன்முகத்தன்மையை பாதிக்கும். இதற்கு மத்திய அரசே காரணமாக இருக்கக்கூடாது.

இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. இந்திக்கு மட்டும் கொண்டாட்டங்களை நடத்துவது பிற மொழிகளை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானதாகும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், பா.ஜனதா ஆட்சி செய்தாலும் இந்தியைத் திணிப்பதில் மட்டும் வேறுபாடு காட்டுவதில்லை. சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவும் இன்று கொண்டாடப்படும் நிலையில், கடந்த ஐம்பதாண்டுகளில் அது தமிழுக்கு என்ன செய்தது?.

எந்தெந்த வகைகளில் தமிழ்மொழி சிறந்தது என்பதை விளக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சென்னை தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருக்கலாம். அதை விடுத்து இந்தியை மட்டும் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இன்று நடைபெறவுள்ள இரு விழாக்களில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்